மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பொது விவாதத்துக்கு தாங்கள் தயார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதில் பேசிய அமித்ஷா, போராட்டங்களைக் கண்டு நாங்கள் அச்சப்படமாட்டோம். சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெறவும் மாட்டோம் என்றார்.
மேலு சி.ஏ.ஏ. தொடர்பாக பொது விவாதத்துக்கு அகிலேஷ் யாதவும் மாயாவதியும் வர தயாரா ? என்றும் அமித்ஷா சவால்விடுத்திருந்தார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், அமித்ஷாவே விவாதத்துக்கான இடத்தை தேர்வு செய்யட்டும். அவருக்கு சாதகமான டிவி சேனல்கள், தொகுப்பாளர்களையும் அழைக்கட்டும். நாங்கள் விவாதத்துக்கு தயாராக் இருக்கிறோம். மதத்தின் அடிப்படையில் மக்களை பாஜக பிரிக்கிறது என்றார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களால் மத்திய அரசு கதிகலங்கிப் போயுள்ளது. இளைஞர்கள், பெண்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவர்களை விவாதத்துக்கு அழைக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ள சவாலை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கிறது. எந்த இடத்திலும் அமித்ஷாவுடன் விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார்.