மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும், இஸ்லாமிய இயக்க, கட்சிகளும் என அனைத்து தரப்பினரும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பொதுக் கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டை லால குன்டா பகுதியில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு எதிராக போராடி வந்த ஆண்கள் பெண்கள் என்று ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் மீதும் காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தடியடி தாக்குதலில் வயதான முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடுத்த கட்ட போராட்டமாக தொடர் முழக்க போராட்டத்தில் பல்வேறு ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஷாஹீன்பாக் போராட்டக் களம் போன்று, தமிழக தலைநகர் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் முழக்க போராட்டம் துவங்கி இருக்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் முழக்க போராட்டம் நேற்று துவங்கி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
