Home » வெளிநாட்டு ஜமாஅத்தினர் கைது விவகாரம்! சிக்கலில் சிக்கியது காவல்துறை!!

வெளிநாட்டு ஜமாஅத்தினர் கைது விவகாரம்! சிக்கலில் சிக்கியது காவல்துறை!!

1 comment

தமிழகத்தில் எத்தியோப்பியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ், மியான்மர், பிரான்ஸ், பெல்ஜியம், காங்கோ மற்றும் கேமரூன் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் 108 பேர் மீது 12 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் எம். நாகூர் மீரான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் இத்தகைய செயல் முற்றிலும் மத பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. அந்த மக்களை சட்ட விரோதமாகக் கைது செய்து, சிறையில் அடைத்ததற்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் எம். நாகூர் மீரான் ஒரு மனித உரிமைப் புகாரை டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே இவர்கள் மே 23.03.2020 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து வெவ்வேறு மஸ்ஜித்களில் தங்கியிருந்தனர். 24.03.2020-ம் தேதி இரவு முதல் நாடு தழுவிய அளவில் முழு அளவிலான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், அவர்களால் வேறு எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. மத்திய அரசால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் தங்களுடைய சொந்த நாடுகளுக்கும் திரும்பிச் செல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

21.03.2020-ம் தேதி முதல், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குனர்கள் (டி.ஜி.பி) மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தொடர்ச்சியான சுற்றறிக்கைகளை வெளியிட்டு வந்தது. அதில், டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்ட, இந்தியாவில் இருக்கக்கூடிய கொரோனா பாசிடிவ் உள்ள தப்லீக் ஜமாத்தினர் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்த வேண்டுமென, அவர்கள் குறித்த தகவல்களை அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பியது. இந்த சுற்றறிக்கையின் படி, வெளிநாடுகளைச் சார்ந்த மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் தமிழகத்திலும் அடையாளம் காணப்பட்டனர். மேலும் அவர்கள் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், 02.04.2020 அன்று, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் டி.ஜி.பி-களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தது. அதில் உள்துறை அமைச்சகம் 960 வெளிநாட்டினரை (வெளிநாட்டு முஸ்லிம்களை) கறுப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் சுற்றுலா விசாக்களில் வந்து தப்லீக் ஜமாஅத் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என முன்கூட்டிய அனுமானத்துடன் தவறாகக் குற்றம் சுமத்தி, அவர்கள் மீது வெளிநாட்டவர் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க ஒரு கண்மூடித்தனமான உத்தரவைப் பிறப்பித்தது. இது உள்துறை அமைச்சகத்தின் மதரீதியான பாரபட்சம் மற்றும் கெட்ட உள்நோக்கம் நோக்கம் கொண்ட செயலின்றி வேறில்லை.

ஏனெனில், இந்து மடாலயங்கள், ஆசிரமங்கள் போன்றவற்றில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிற மதத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவில்லை; அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளிநாட்டில் இருந்து முறையான சுற்றுலா விசாவில் வந்த தப்லீக் ஜமாத்தினரை மத்திய பா.ஜ.க. அரசு மதக் கண்ணோட்டத்துடன் குறி வைத்துள்ளது.

ஆனால் இவர்கள் குற்றம் சுமத்தியது போன்று வெளிநாட்டு முஸ்லிம்கள் இங்கு வந்து தப்லீக் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாறாக, மற்ற மதத்தினரைப் போன்று இவர்களும் ஆன்மீகச் சுற்றுலாவாகவே இங்கு வந்துள்ளனர்.

உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை கிடைத்தவுடன், தமிழக காவல்துறையினர் 9 நாடுகளைச் சேர்ந்த 11 பெண்கள் உட்பட 108 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் 12 வழக்குகள் பதிவு செய்தனர் அந்த நபர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை காத்திருந்து அவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சென்னை, புழலில் உள்ள மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைத்தனர். நீடாமங்கலத்தில், மியான்மரைச் சேர்ந்த 13 பேர் ரிமாண்டிற்காக ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜாமீனில் விடுதலை செய்தார். சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, சிறைக்கைதிகளின் அச்சத்தை போக்குவதற்காக, சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மற்றும் இது தொடர்பாக கிழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பியிருந்த சுற்றறிக்கை ஆகியவற்றை மதித்து தாமாக முன்வந்து அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தவிதமான முன் தயாரிப்பும் இல்லாமல் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அரசால் திடீரென்று அறிவிக்கப்பட்ட நீண்ட கால ஊரடங்கின் காரணமாக தேசிய தலைநகர் உட்பட பல மாநிலங்களில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதால், அவர்கள் தங்கள் குழந்தைகளை சுமந்து கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய அவல நிகழ்வினை ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன; கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவும், இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் இந்த கொரோனா தொற்றுநோய்க்கு மத்திய அரசால் மதச்சாயம் பூசப்பட்டது.
வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்ட பின்னர், மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் தமிழக அரசும் மத துவேஷத்துடன் அவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து கைது செய்தது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் மட்டுமன்றி, கைது நடவடிக்கைகள், நீதிபதி முன்பு ரிமாண்ட் செய்தது, அதன் பின்னர் சிறையிலடைத்தது என அனைத்திலும், கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவை தமிழக காவல்துறையினரால் இதில் முழுவதுமாக மீறப்பட்டுள்ளன.

இந்த சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி நாகூர் மீரான், கடந்த மே 9-ம் தேதி ஒரு மனித உரிமைப் புகாரை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தார். சட்டத்திற்குப் புறம்பாகவும், மனித உரிமைகளை மீறியும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட, தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடருமாறும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்ட விரோத கைது மற்றும் சிறையிலடைக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகியவற்றால் கடும் மன வேதனைக்குள்ளான பாதிக்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அப்புகாரில் அவர் கோரியுள்ளார். நேற்று (18.05.2020) இந்தப் புகார் மனித உரிமை ஆணையத்தால் வழக்கு எண் வழங்கி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter