எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில், கடந்த ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் மூலம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, முத்துபேட்டை, மதுக்கூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் பயணிகள் மிகவும் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(வண்டி எண் – 06035), வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(வண்டி எண் – 06036) வாராந்திர சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது வருகிற ஜனவரி 1, 2023 வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலாக இயங்கி வரும் இதனை, நிரந்தரமாக்க வேண்டும் என இப்பகுதி ரயில் பயணிகள் சங்கத்தினர், பயணிகள், வியாபாரிகள் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
