எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம் இன்று 16.12.2017 காலை 10.00 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில தலைவர் எம்.எம்.அப்பாஸ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ். அலாவுதீன், மாநில செயலாளர் ஏ.ராஜா முகம்மது,மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அதிரை நிஜாம் உள்பட மாநில நிர்வாகிகளும், வழக்கறிஞரணி மாநில செயற்குழு உறுப்பினர்கள், மதுரை மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் சையது அப்துல் காதர் உள்பட இதர வழக்கறிஞரணியை சேர்ந்த வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பொய் வழக்கில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் மதுரை வழக்கறிஞர் முருகனை விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ.) கீழ் புனையப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
2. நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கான நீதிமன்றக் கட்டணங்கள் அதிகளவில் உயர்த்தப்பட்டதால் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் பெரும் நிதிச்சுமையை சந்தித்து வருகின்றனர். ஆகவே உயர்த்தப்பட்ட நீதிமன்றக் கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சாமான்ய மக்கள் நீதிமன்றங்களை எளிதாக அணுகக்கூடிய வகையில் நீதிமன்றக் கட்டணங்களை குறைக்க வேண்டும்.
3. சமீபகாலமாக வழக்கறிஞர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது வழக்கறிஞர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மதுரையைச் சார்ந்த இளம் வழக்கறிஞர்கள் ஜெயினுல் ஆபுதீன், நவாஸ்கான், நெல்லை வழக்கறிஞர் செம்மணி, கும்பகோணம் வழக்கறிஞர் சங்க தலைவர் உட்பட இதர வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டுள்ளனர். மேற்படி வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகி நிஜாமுதீன் என்பவரது கார் சமூக விரோதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உரிய விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்பட வேண்டும். காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.