பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ‘பயங்கரவாதத்திற்கு நிதி கூடாது’ (No Money for Terrorism) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பேசிய அமித் ஷா, “பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும், எந்தக் குழுவுடனும் தொடர்புபடுத்தக் கூடாது.
பயங்கரவாதிகள் நாச வேலைகளைச் செய்ய பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்க டார்க் நெட் எனப்படும் இணைய வழியை பயன்படுத்துகின்றனர். இதன் வாயிலாக தங்கள் அடையாளத்தை மறைத்து வன்முறையை விதைக்கின்றனர்.
பயங்கரவாதமே சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்பது பயங்கரவாதத்தைவிடவும் அபாயகரமானது. ஏனெனில், பயங்கரவாதத்துக்கான வழியும், முறைகளும் இங்கிருந்துதான் வகுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது உலக நாடுகளின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. அதேபோல், பயங்கரவாதத்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன், தேசத்துடன் ஏதேனும் ஒரு குழுவுடன் தொடர்புப்படுத்தக் கூடாது” என்றார்.