Monday, September 9, 2024

அன்னையர்_தினம் / May 14

spot_imgspot_imgspot_imgspot_img

அம்மா என்னும் அன்பை நேசி!

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி
……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?
அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம்
……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்
அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே
…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே
அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட
….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே!

அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
……அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால்
…..பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர்
இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
…..ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்
என்புக்கும் தோலுக்கும் அம்மா ஈந்த
…..இணையில்லாக் குருதியாலே நாமும் வந்தோம்!


வலியென்றால் உயிர்போகும் நிலையில் நாமும்
….வலியென்றால் உயிர்தருவாள் அம்மா மட்டும்
வலியொன்றை அனுபவித்து அவளும் ஈன்று
…வாஞ்சையுடன் அவ்வுயிரை நோக்கும் காலை
வலியென்றால் என்னவென்று கேட்பாள் நாளை
…வலிக்குமேலே வலியையும்தான் பத்து மாதம்
வலியெல்லாம் சுமந்தவளே அம்மா என்று
….வல்லோனும் சொல்லிவிட்டான் மறையின் கூற்றில்!

கல்லறையில் உறங்குகின்றாய் என்றன் அம்மா
……கருவறையில் சுமந்தவளே என்றன் அம்மா
செல்லறையின் செல்லுக்குள் குருதிச் செல்ல
…..செய்திட்டத் தியாகங்கள் என்ன வென்பேன்!
சில்லறைகள் காணாத காலம் கண்டாய்
…செல்வத்தில் இருக்கின்ற நேரம் நீயும்
கல்லறைக்குள் போய்விட்டாய் என்ன செய்ய?
…கர்த்தனவன் கட்டளையும் அஃதே தானோ!

தலையணையும் படுக்கைகளில் இருந்தும் என்ன
….தானாக நித்திரையும் வருதல் இல்லை
தலையணையாய் உன்மடியில் படுக்க நீயும்
….தந்தசுகம் தலையணையும் தரவே இல்லை
மலையனைய துயரங்கள் என்றன் முன்னே
….மனக்குழப்பம் தந்துவிட்ட போதும் என்னை
நிலைகுலையாத் துணிவுடனே வாழ வேண்டி
….நீதந்த அறிவுரைகள் மறவேன் அம்மா!

என்முகமும் காணாமல் புதைத்த அன்று
…எப்படித்தான் துடித்தேனே நானும் என்று
உன்மனமும் அறியாமல் நீயும் மீளா
..உறக்கத்தில் சென்றுவிட்டாய் என்றன் அம்மா
தன்சுகத்தை உறக்கத்தை மறந்து நீயும்
…தவிப்புடனே என்னையும்தான் பாது காத்துப்
புன்சிரிப்பை மருந்தாக்கி வளர்த்தத் தாயே
…புண்ணியங்கள் செய்துவந்த தாயும் நீயே!

படிக்கட்டுப் படிக்கட்டாய் முன்னே ஏறும்
….படித்தரங்கள் எல்லாமும் உன்னைக் கூறும்
நடிக்கின்ற உலகத்தில் உன்றன் அன்பில்
….நடிப்பில்லா உளத்தூய்மை கண்டேன் நானே
வடித்திட்டக் கண்ணீரால் என்னை அன்பாய்
…வாரிமுத்தம் தந்திட்டப் பொழுதைத் தேடித்
துடிக்கின்ற என்னுள்ளம் அறிய வேண்டும்
..தொடர்ந்துநீயும் கனவினிலே வரவும் வேண்டும்!

ஆக்கம்:

கவியன்பன் கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நாற்றமெடுக்கும் நாதக விவகாரம் – ஹிமாயூன் கபீரால் காணாமல் போகும் கட்சி...

நாம்தமிழர் என்ற கட்சி எப்படி அசுர வேகத்தில் வளர்ந்ததோ அதே அசுர வேகத்தில் வீழ்ச்சிக்கும் சென்று கொண்டுள்ளன. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக...

அதிரை நகராட்சியில் தொடரும் விதிமீறல் :மூடி மறைக்கப்பட்ட டெண்டர் நிறுத்திவைப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு...

அதிராம்பட்டினம் மக்களுக்கு நல்ல செய்தி – 6 மாத காலத்திற்குள் அதிரையில்...

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்குடட்ட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து...
spot_imgspot_imgspot_imgspot_img