“I.N.D.I.A” கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் 6 மாநில முதல்வர்கள் உட்பட 63 தலைவர்கள் நாளை மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே பாட்னா, பெங்களூரில் “இந்தியா” கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.
மும்பையில் நடைபெற உள்ள “இந்தியா” கூட்டணி கூட்டம் தொடர்பாக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டேல், முன்னாள் முதல்வர் அசோக் சவாண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தலைவர்கள் தெரிவித்த முக்கிய கருத்துகள் :
உத்தவ் தாக்கரே: இந்தியாவையும் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்று சொல்ல முடியுமா? “இந்தியா” கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகங்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படி பாஜக கூட்டணியில் சொல்லிவிட முடியுமா? சர்வாதிகார மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. இந்த நாட்டின் கூட்டாட்சி முறை சீர்குலைய அனுமதிக்க முடியாது. கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் சகோதரிகள் மறக்கப்பட்டுவிட்டனர். இப்போதுதான் சிலிண்டர் விலையை ரூ200 குறைத்துள்ளனர். இப்படியான சர்வாதிகாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்றார்.
சரத்பவார்/நானா படோல்/ அசோக் சவாண்: இந்தியா கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2 கட்சிகள் இணைந்துள்ளன. மொத்தம் 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் நாளைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சாகு மகாராஜ், பூலே, அம்பேத்கர், சிவாஜியின் சிந்தனைகளை இந்தியா அணி முன்னெடுத்துச் செல்லும்.
