தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மை சமூகத்தினரின் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்தது.
அப்போது திமுக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராம.குணசேகரன் என்பவர் போர்க்கொடி தூக்கினார். இந்தநிலையில் அவரது மனுவை விசாரித்த அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கருணாகரனின் பதில் அறிக்கை தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், பள்ளி இயங்கி வரும் இடத்தை சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு விற்பனை செய்ய கூடாது என்கிற இராம.குணசேகரனின் ஆட்சேபனை மனு உள்நோக்கமுடையது எனவே அது ஏற்பதற்கில்லை என்றும் மேலும் தங்களது ஆட்சேபனையை நிராகரிக்கலாம் என நில நிர்வாக ஆணையருக்கு தகவல் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பிறகும் பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடத்திற்கு பல்வேறு வழிகளில் குணசேகரன் இடையூறுகளை செய்து வருகிறார்.
அல் அமீன் பள்ளிவாசல் விவகாரம், அர்டா மல்டி ஸ்பெஷாலிட்டி இலவச மருத்துவமனை விவகாரம், வார்டு மறுவரையரை, துணை தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இராம.குணசேகரனின் உள்நோக்கத்தை 2010ம் ஆண்டிலேயே மாவட்ட ஆட்சியர் ஒருவர் கண்டறிந்து எழுத்துப்பூர்வமாக பதிவு செய்திருப்பது தற்போது அதிரை மக்களை சிந்திக்க தூண்டி இருக்கிறது.