தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர நிர்வாகத்தை நிர்வாக வசதிக்காக மேற்கு, கிழக்கு என இரண்டாக பிரித்து கடந்த மாதம் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதில் 14 வார்டுகளை கொண்ட மேற்கு நகரத்திற்கு S.H.அஸ்லம், 13 வார்டுகளை கொண்ட கிழக்கு நகரத்திற்கு இராம.குணசேகரன் ஆகியோரை பொறுப்பாளர்களாகவும் நியமித்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத இராம.குணசேகரன் தரப்பினர் தங்களது பவர் குறைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் தொடர்ச்சியாக திமுகவுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பகிரங்கமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக உட்கட்சி விவகாரங்களை முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் கவுன்சிலர் முகைதீன், முன்னாள் நகர துணை செயலாளர் அன்சர்கான் ஆகியோரை வைத்து ஊடகங்களில் பேட்டி கொடுத்து தேர்தல் நேரத்தில் திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் மேற்கு நகர எல்லையில் இருக்க கூடிய இராம.குணசேகரனின் தீவிர விசிரிகள் ஒருசிலர் S.H.அஸ்லத்துடன் இணைந்து செயல்படாமல் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்களின் பெயர்களை வாசித்தார். அப்போது அதிரை மேற்கு நகர திமுக பொறுப்பாளரான S.H.அஸ்லத்தின் பெயரையும் உதயநிதி ஸ்டாலின் படித்தார். இதன் மூலம் அதிரை மேற்கு நகர பொறுப்பாளராக S.H.அஸ்லத்தை உதயநிதி ஸ்டாலினே அங்கீகரித்துவிட்ட பிறகு, இனியும் அஸ்லத்துடன் மல்லுக்கட்டுவது தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று விபரம் அறிந்தவர்கள் பேச துவங்கிவிட்டனர்.
ஏற்கனவே தான் முன்னாள் சேர்மனாக இருந்தபோதிலும் தலைமைக்கு கட்டுப்பட்டு நகர்மன்ற தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார் S.H.அஸ்லம். இதனால் குட்புக்கில் இடம்பிடித்த அவருக்கு முதலில் மாவட்ட பொருளாளர் பதவியை கொடுத்த தலைமை, தற்போது நகர பொறுப்பை கொடுத்து இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்