திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது. 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடன் துவங்க வேண்டும். நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ம் தேதி மாலை முதல் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பஸ்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு வரையில் 8வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தினை விலக்கி கொண்டனர்.
மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி என 4 டெப்போக்களிலும் மொத்தமுள்ள 239 பஸ்களில் தற்காலிக ஊழியர்களை கொண்டு முதல் 3 நாட்கள் 50 சதவிகிதத்திற்கு குறைவாகவும் அதன் பின்னர் சுமார் 75 சதவிகித பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் வேலை நிறுத்தம் முடிந்து நேற்று பஸ்களை இயக்குவதற்காக நிரந்தர ஊழியர்கள் தங்களது பணிமனைகளுக்கு சென்றபோது ஏற்கனவே தற்காலிக ஊழியர்கள் மூலம் மாவட்டத்தில் 50 சதவிகித பஸ்கள் எடுத்து செல்லப்பட்டுவிட்டதால் பஸ்கள் கிடைக்காமல் நிரந்தர தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.
அதன் பின்னர் கடந்த ஒரு வார காலத்தில் 4 டெப்போக்களிலும் தலா 10 பஸ்கள் வீதம் பழுதுபட்டு நின்ற அனைத்து பஸ்களும் மதியம் வரையில் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் தற்காலிக ஊழியர்கள் பஸ்களை இயக்கியபோது அதில் பொது மக்கள் பயணம் செய்ய அஞ்சிய நிலையில் நேற்று நிரந்தர தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் எவ்வித அச்சமின்றி பொதுமக்கள் பயணம் செய்தனர். மேலும் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், பொங்கல் சீர்வரிசை வைப்பதற்கு உகந்த நாள் என்பதாலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.