தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மறுநாள் காலையில் மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, காட்டுப்பள்ளி தெரு, காலியார் தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மேலத்தெரு 16 வது வார்டு பகுதியில் நீர்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அதன் அருகே அமைந்துள்ள வடிகாலில் குடியிருப்பு கழிவுநீர் செல்வதால், பிரதான குழாயில் கழிவு நீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது;
‘கடந்த 4 மாதங்களாக இப்பிரச்சனை இப்பகுதியில் இருந்து வருகிறது. வடிகாலில் செல்லும் குடியிருப்பு கழிவுநீர் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் உடைந்துபோன பிரதான குழாயில் கலந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி பலரை தாக்கியது.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பேரூராட்சி பணியாளர்கள் உடைந்தபோன பிரதான குழாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், அடுத்து சில தினங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, முன்பு இருந்ததைவீட தற்போது அதிகமாக குடிநீர் வெளியேறி வீணாகிறது. மீண்டும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் கலக்கமடைந்துள்ளோம். சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.