Home » ராகுல் காந்தியின் பேச்சை தங்கு தடையின்றி மொழிபெயர்த்த அரசுப்பள்ளி மாணவி… குவியும் பாராட்டு !

ராகுல் காந்தியின் பேச்சை தங்கு தடையின்றி மொழிபெயர்த்த அரசுப்பள்ளி மாணவி… குவியும் பாராட்டு !

0 comment

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு கோழிக்கோடு சென்ற அவர் இன்று வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சந்தித்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கருவரக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அறிவியல் வளாகம் கட்டப்பட்டது. அதனை திறந்து வைக்கச் சென்ற ராகுல், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.

மாணவர்களை நோக்கி என்னுடைய உரையை மலையாளத்தில் மொழிபெயர்க்க யார் வருகிறீர்கள் என ராகுல் கேள்வி எழுப்ப, ஒருத்தரை ஒருவர் மாணவ, மாணவிகள் பார்த்துள்ளனர். அப்போது துணிச்சலுடன் நான் மொழிபெயர்க்கிறேன் எனக் கைதூக்கிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சஃபா ஃபபினை ராகுல் மேடைக்கு அழைத்து தனது பேச்சை மொழி பெயர்க்க வைத்தார்.

ராகுல் ஆங்கிலத்தில் பேசியதை எந்த பிசிறும் இல்லாமல், தங்கு தடையின்றி மாணவி சஃபா மலையாளத்தில் மொழி பெயர்த்தார். ஒரு அரசுப்பள்ளி மாணவியிடம் இவ்வளவு ஆங்கில புலமையும், விரைவாக உள்வாங்கி மொழிபெயர்க்கும் திறனும் இருந்ததை கண்டு ராகுல் வியந்து பாராட்டினார். மேலும், சஃபாவின் திறமையை கண்டு அவரது ஆசிரியர்களே ஆச்சரியம் அடைந்தனர்.

ராகுல் தனது உரையை முடித்ததும் சஃபாவை பாராட்டி சாக்லேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட மாணவி சஃபா ஆனந்தக் கண்ணீர் வடித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. வகுப்பு தோழிகளும், ஆசிரியர்களும் தங்கள் வாழ்த்தை சஃபாவிடம் தெரிவித்து பாராட்டினர்.

இது தொடர்பாக மலையாள ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள சஃபா ஃபபின், தன்னுடைய தந்தை மதரஸா ஆசிரியர் என்றும், ராகுல் பேச்சை தாம் மொழிபெயர்ப்பேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், ராகுல் பேச்சை தாம் தான் மொழிபெயர்த்தேன் என்பதை இன்னும் கூட தம்மால் நம்ப முடியவில்லை என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter