எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவது வழக்கமானது தான் என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சிலர் கௌரவத்திற்காக கூட இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவார்கள் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவதன் பின்னணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ்-க்கு மத்திய அரசின் வை-பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வருக்கோ மாநில போலீஸாரின் பாதுகாப்பு மட்டுமே உள்ளது. இதனையடுத்தே ஓபிஎஸ்-ஐ விட தான் உயர்ந்தவர் மற்றும் அதிகாரமிக்கவர் என்பதை காட்டவே எடப்பாடி பழனிசாமி, இசட் பிளஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.