சென்னை: தமிழகத்தில் சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அதைத் தடுப்பதற்காக வாகன ஓட்டுநர்களுக்குப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவு விவரம்:தமிழகத்தில் நிகழும் விபத்துகளை ஆய்வுசெய்ததில் ஓய்வு கிடைக்காத நிலையில் ஓட்டுநர்கள் தொடர்ந்து வேலைசெய்வதன் காரணமாகவே 90 சதவீத விபத்துகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
பணிச்சுமை காரணமாக ஓட்டுநர்களுக்கு மிகுந்த அலுப்பும் மன உளைச்சலும் ஏற்படுகிறது.
சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகள் கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த 2016-ல் 17 ஆயிரத்து 218 பேர் பல்வேறு சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். 2017 அக்டோபர் மாதம் வரை 14 ஆயிரத்து 77 பேர் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
வாடகைக் கார் நிறுவனங்கள், சுற்றுலா வாகனங்களால் தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு மோட்டார் வாகனச் சட்டம் 1998, மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டம் 1961ன் படி கட்டுப்பாடுகளை விதிக்க சாலைப் போக்குவரத்து ஆணையர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாடகைக் கார், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் யாரும் தினசரி 8 மணிநேரத்துக்கு மேல் வாகனங்களை ஓட்டக் கூடாது. வாரத்துக்கு அதிகபட்சம் 48 மணிநேரம்தான் வாகனம் ஓட்ட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக ஓட்டுநர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.
டூட்டி முடிந்தபின்னரும் ஓவர்டைம்ஆக இரண்டாவது டூட்டியை ஓட்டுநர்களுக்கு வழங்கக் கூடாது. வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகளை ஓட்டுநர்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.
இந்த விதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ரத்து செய்யப்படும்.
அதேபோல் மேற்படி ஓட்டுநர்கள் இயக்கிய வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். தகுதிச் சான்றும் வழங்கப்படாது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.