அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிபுரக்கரை, ராஜாமடம், கீழத்தோட்டம், மகிழங்கோட்டை, மாளியக்காடு, தொக்காலிக்காடு, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர்,போன்ற எராளமான கிராமங்கள் உள்ளன இங்கு சிறு விவசாயமான ஆடு மாடு கோழி வளர்க்கும் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இன்னும் செல்லப் பிராணிகளான நாய் பூனை வளர்ப்போரும் கனிசமாக உள்ளனர் இந்த நிலையில் பிராணிகளுக்கு ஏற்படும் உபாதைகளை போக்க அதிராம்பட்டினம் கால்நடை மருந்தகத்தை நாடி பயன் பெறுகின்றனர்.
மருந்தக அந்தஸ்த்தில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வரும் இந்நிலையத்தினை தரம் உயர்த்தி கால்நடை மருத்துவ மனையாக அரசு மாற்றி தரும் பட்சத்தில் இன்னும் அதிக அளவில் விவசாயிகள் பயன்பெற எதுவாக இருக்கும் என கோரிக்கை வைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
கடந்த முறை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தஞ்சை வருகை தந்தபோது திறந்து வைக்கப்பட்ட இம் மருந்தக புதிய கட்டிடம் சுற்றுச் சுவரின்றி இருப்பதை கால்நடைத் துறை அதிகாரிகள் மூலம் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சுற்றுச்சுவர் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அமைத்து தர உறுதி அளித்துள்ளார்கள் என கால்நடைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும்,மருந்தகத்திற்கு செல்லும் பாதைகளும் சரியில்லை, கரடு முரடான பாதைகளில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை கொண்டு செல்ல முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே, அதிராம்பட்டினம் நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் , சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடன் தலையிட்டு மருந்தக அந்தஸ்த்தில் இருக்கும் கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தித் தரவேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் தகுந்த பாதை அமைத்துத் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.