ஒரு இனத்தின் பெருமையை அதன் வரலாற்றிலிருந்து அறியலாம். மூன்று கடல்களையும் கடல்சூழ் நிலத்தையும், அதன் பொருளாதாரத்தையும் ஒரு நூற்றாண்டு முன்புவரை ஒருசேர ஆண்ட இந்த மண்ணின் மக்களான – மரக்கலங்களின் ஆயர்கள் – மரைக்காயர்கள் வாழும் ஊர் மஹ்மூதுபந்தர் என்ற பரங்கிப்பேட்டை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே படர்ந்து செல்லும் இவர்களது வரலாறு மற்றும் இவர்களின் சமகால வாழ்முறைகளை பற்றிய நூல்வடிவிலான முதல் பதிவு “மஹ்மூத்பந்தர் – பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்” என்ற தலைப்பில் பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் வெளியிடப்பட்டது.
விழாவில் சிறப்புரை ஆற்றி பேசிய சமூக நீதி அறக்கட்டளை தலைவர் சி.எம்.என். சலீம் அவர்கள், முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பொருளீட்டல் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “இவற்றில் சிக்கல் ஏற்படும்போது பெரும் பின்னடைவினை சமுதாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றும் எச்சரித்தார். “ஒரு மிகப்பெரிய வாணிப சமுதாயம், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை தனது கப்பல் மற்றும் வணிகம் மூலம் அள்ளி வழங்கி உலகையே உய்வித்து கண்ணியமாக வாழ்ந்த பெருமக்கள், தற்போது மாத ஊதியத்திற்கு மாதக்கணக்கில் குடும்பங்களை பிரிந்து வாழாது வாழும் நிலை ஏற்பட்டதற்கு காரணம் தனது கல்வி முறை, கலாச்சார செழுமை மற்றும் பொருளீட்டல் முறைமைகளை புரிந்து வாழாததால்தான்” என்றும் விளக்கி பேசினார்.
புதுக்கோட்டையை சேர்ந்த வரலாற்றாய்வாளர் ஜே. ராஜா முஹம்மது அவர்கள் பேசும்போது, “ஆங்கிலேயர்களின் குறிப்புக்களில் மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை, சென்னை போன்று ஒரு நகரியம் சார்ந்த குடியிருப்பு” என்று குறிக்கப்பட்டுள்ளதாக வியந்து உரைத்தார். தான் எழுதிய சோழமண்டல கடற்கரையோர முஸ்லிம்களின் வாணிப வரலாறு என்ற ஆய்வினை படித்த பிறகு இப்படி ஒரு கடல்களை ஆட்சி செய்த செம்மாந்த இனம் ஒன்று இந்திய தீபகற்பத்தின் தென்முனையில் செழிப்பாக வாழ்ந்திருந்தது பற்றி வடநாட்டு வரலாற்றாய்வாளர்கள் வியப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு பேசினார்.
தற்கால சூழலில் வரலாற்றினை பதிவு செய்ய வேண்டிய அவசியங்களைப் பற்றி இருவருமே வலியுறுத்தி பேசினார்கள்.
பிறகு, “மஹ்மூத்பந்தர் – பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்” நூலின் ஆசிரியர் எல். ஹமீது மரைக்காயர் தனது ஏற்புரையில், இந்த நூலிற்கான தனது கனவு மற்றும் முயற்சி துவங்கிய விதத்தினை பற்றி விவரித்தார். 1998களில் இவ்வூருக்கு தான் மீள்குடிவந்த காலங்களில் பரங்கிப்பேட்டையின் அருகாமை ஊர்களில் முஸ்லிம்களின் வாழ்நிலை பற்றி அறிந்துகொள்ள நண்பர்களுடன் மிதிவண்டியில் அலைந்தது முதல் தனது இந்த புத்தக ஆக்கத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் வரை விளக்கினார். எப்படி வாழ்ந்த சமுதாயம், இன்று தனது அடையாளங்கள் பற்றிய ஓர்மையின்றி, தனது பாரம்பரியம் பற்றிய புரிதலின்றி அலைக்கடலில் இலக்கில்லாமல் திரியும் ஓடம்போல ஆனது ஏன்? என்ற பெரும் கேள்வியின் கனத்தை பார்வையாளர்களிடம் கடத்திவிட்டு அமர்ந்தார்.
செல்வி செய்யிதா பரீஹா ஹமீது மரைக்காயர், தனது மழலை குரலில் கிராஅத் ஓதி நிகழ்வினை துவக்கி வைத்தார். எச். லியாகத் அலி தலைமை தாங்கி உரையாற்றினார். பொறியாளர் எஸ்.ஏ. செய்யது ஷாஹுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.ஓ. செய்யது ஆரிப், ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் நிர்வாகி ஹாஜி ஐ. இஸ்மாயில் மரைக்காயர், ஆலோசனை குழு உறுப்பினர் ஹாஜி எச். முஹம்மது மக்தூம், ரஹீமா அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி யூ. ஹுஸைனுல் ஆபிதீன், பேராசிரியர் முனைவர் சாதிக் அப்துல் ஹமீது மற்றும் மருத்துவர் லெ. பூபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள். எல். ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
புத்தக விற்பனைக்கென்று அமைக்கப்பட்டிருந்த தனி அரங்கில் சுடச்ச்சுட புத்தக விற்பனை நடைபெற்றது. மஹ்மூத்பந்தர் முஸ்லிம்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றில் முதல் வரலாற்று பதிவு நூல் இது. அதைப்பற்றி பேசும் முதல் நிகழ்ச்சி இது” என்று பல “முதல்”களை கொண்ட இந்நிகழ்விற்கு மக்கள் திரள் கணிசமாகவே இருந்தது. நமது முன்னோர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தியாகங்களை இந்த சமூகத்தில் பேசு பொருளாக ஆக்கிடும் முயற்சியில் இது ஒரு துவக்கப்புள்ளி மட்டுமே… முயற்சிகள் தொடரும்.
நூல் குறித்த தொடர்புக்கு… ஹமீது மரைக்காயர் +91 98943 21527 / abuprincess@gmail.com
196 பக்கங்களை உள்ளடக்கிய, 125 ரூபாய் விலையுள்ள இந்நூல் பரங்கிப்பேட்டையில் கிடைக்குமிடங்கள்: (1) ஜெனிஃபாஹ் கம்பியூட்டர் சென்டர், கச்சேரித் தெரு (2) ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளி இஸ்லாமிய நூலகம், மீராப்பள்ளி தெரு (3) புன்னகை புத்தக நிலையம் (9003969747), குருசாமி ராயர் தெரு