ஒரு மணிக்கு மேல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்துக் கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையைக் கோவை காவல்துறை வழங்கியது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3வது முறையாக நாடு முழுதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாரத்தில் 7 நாட்கள் 7 வண்ணங்கள் வாகனங்களில் பூசப்பட்டு , மீண்டும் சாலைகளில் திரிவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை, சூலூர் காவல்துறையினர் நேரக்கட்டுப்பாடான மதியம் 1 மணியைக் கடந்து சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களைப் பிடித்து, கும்மியடிக்க வைத்துள்ளனர். கும்மியடிக்கும் போது, விழித்திரு, விலகி இரு எனச் சொல்ல வைத்து, நூதன தண்டனையை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
இதனிடையே கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் கடந்த மார்ச் 25 முதல் நேற்று வரை 15,598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17,646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 15,165 பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 35 லட்சத்து 88 ஆயிரத்து 700 அபராதம் பெறப்பட்டு உள்ளது.
நன்றி: புதிய தலைமுறை