Home » ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து! ரீசன் என்னவா இருக்கும்?

ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து! ரீசன் என்னவா இருக்கும்?

0 comment

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். முதல்வர் உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களுக்கும் இந்த தேநீர் விருந்தில் அழைப்பு விடுக்கப்படும். அவர்களும் அந்த விருந்தில் கலந்துகொள்வார்கள்.
அந்த வகையில், இன்று சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வருக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால், முதல்வரும், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்தனர்.

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் நான் கையெழுத்து போட மாட்டேன் என இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். அப்போதே அவருக்கு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், நேற்று முன்தினம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகனை இழந்த சோகத்தில் அவரது தந்தையும் இன்று தற்கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இதுதொடர்பான அறிக்கையில் ஆளுநர் ரவியை “இரக்கமற்ற ஆளுநர்” என்றும் முதல்வர் கடுமையாக விமர்சித்தார். அதேபோல, திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இந்த சூழலில், தான் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை ரத்து செய்வதாக ஆளுநர் மாளிகை இன்று மாலை திடீரென அறிவித்தது. கனமழை காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter