Home » மூச்சுக்கு 300 முறை தாமரை மலர்ந்தே தீரும் என்றவர்களின் முகத்தில் கரியை பூசிய தமிழகம் !!

மூச்சுக்கு 300 முறை தாமரை மலர்ந்தே தீரும் என்றவர்களின் முகத்தில் கரியை பூசிய தமிழகம் !!

0 comment

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என மூச்சுக்கு முந்நூறு முறை தமிழிசை வகையறாக்கள் கூவியதை தமிழக வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர். சுட்டெரிக்கும் அக்னி வெயிலில் தாமரையை தீய்ந்து கருக வைத்துவிட்டனர் தமிழக வாக்காளர்கள்.

ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ என தமிழகத்தை சுடுகாடாக்க எத்தனை திட்டங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் மத்திய அரசு இறக்கிப் பார்த்தது. ஒட்டுமொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்து போராடிய போதும் கிஞ்சித்தும் இரக்கம் காட்டவில்லை மத்திய பாஜக அரசு.

காவிரி டெல்டாவில் 400 விவசாயிகள் மடிந்து போன போது இரக்கம் காட்டவில்லை. காவிரி தொடர்பான வழக்குகளில் கர்நாடகாவில் வெல்ல வேண்டும் என்பதற்காக அப்பட்டமாக தமிழகத்தின் உரிமையை காலில் போட்டு மிதித்தது பாஜக.

தூத்துக்குடியில் 13 அப்பாவிகள் ஸ்டெலைட் ஆலைக்காக படுகொலை செய்யப்பட்ட போது அதை நியாயப்படுத்தியது பாஜக. உயிர் நீத்தவர்களை மாவோயிஸ்டுகள் என கூசாமல் முத்திரை குத்தியது.

ஓகி மற்றும் கஜா புயலால் இறந்து போன மீனவர்கள் மற்றும் மக்களுக்கு உதவ முன்வரவில்லை மத்திய பாஜக அரசு. ஒவ்வொரு புயலின் கோரத்தாண்டவத்துக்கும் தமிழகம் துயரத்தில் தத்தளித்த போது எட்டிப்பார்க்க மனமில்லாத ஆட்சியாக மத்திய பாஜக இருந்தது. அனிதாக்கள் தற்கொலைக்கு தமிழக அரசியல் கட்சிகள் மீது பழிபோட்டு கிண்டலடித்தது பாஜக.

பச்சை குழந்தை போல் கருதும் நெல் நாற்று வயலில் பொக்லைன் இயந்திரங்களை அனுப்பி விவசாயிகளின் நெஞ்சில் ஏறி மிதித்தது மத்திய பாஜக அரசு. ஒட்டுமொத்த தமிழகமே எதிர்த்து குரல் கொடுத்த போதும் அத்தனை பேரையும் ஆன்டி இந்தியன்ஸ்; பிரிவினைவாதிகள் தேசதுரோகிகள் என முத்திரை குத்தி மூர்க்கத்தைக் காட்டியது மத்திய பாஜக அரசு.

தமிழ்நாட்டு மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்குப் பதில் வட இந்தியர்கள் திணிக்கப்பட்டனர். இதனை தட்டிக்கேட்டால் பிரிவினைவாதம் பேசுகிறீர்கள் என எகத்தாளம் பேசியது பாஜக.

இத்தனைக்கும் பிறகும் தமிழக வாக்காளர்கள் ‘வடக்கத்தியர்களை’ப் போல வாக்களிப்பார்கள் என அதிமுகவின் முதுகில் ஏறி ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என தொண்டை தண்ணீர் வற்ற வசனம் பேசியது பாஜக. பாதித்த போது எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி, ஓட்டுக்காக ஓடோடி வந்தார் தமிழகத்துக்கு.

நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பாஜக மீதான அத்தனை கோபங்களையும் லோக்சபா தேர்தலில் மொத்தமாக இறக்கி வைத்திருக்கின்றனர் தமிழக வாக்காளர்கள். வியாக்கியானங்கள், ஏகடியங்கள் பேசி அடுத்தவர்களை சீண்டிப்பார்க்கும் பாஜகவின் சித்துவிளையாட்டுகள் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது என்பதை செவுளில் ஒரு சேர அறைந்து சொல்லியிருக்கிறது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter