அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்து சென்றுள்ளனர்.
காவல்துறையின் நள்ளிரவு அத்துமீறலை கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிரை அனைத்து முஹல்லா, அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ADSP ஜெயச்சந்திரன், DSP சபியுல்லாஹ், ஆய்வாளர் ஜெயமோகன் ஆகியோர் அதிரை அனைத்துமுஹல்லா செயலாளர் PMK. தாஜுதீன், தமுமுக மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, மஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், அன்வர் அலி, புகாரி, அரசியல் மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நேற்று இரவு நடைபெற்ற சம்பவத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்று இனி நடக்காது என்றும், ஜமாஅத் அனுமதி இன்றி இரவு நேர கைதுகளோ, தெருவிற்குள் நுழைவதோ இருக்காது என்று உறுதிமொழியும் அளித்துள்ளனர். இதனடிப்படையில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


