Home » 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெல்லிக்கு கிடைக்க வேண்டும் – நீதிமன்றம் பொளேர் உத்தரவு!

480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெல்லிக்கு கிடைக்க வேண்டும் – நீதிமன்றம் பொளேர் உத்தரவு!

0 comment

தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகள் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

இதைச் சமாளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. நேற்று (ஏப்.21) இரவு 10 மணி வரை இதுகுறித்த விசாரணை நீடித்தது.

இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், “டெல்லி தனது முழு 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைப் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், மிகத் தீவிரமாக இந்த விவகாரத்தை கையாள வேண்டும். இல்லையெனில், இது பெரும் உயிர் இழப்பை ஏற்படுத்தும். சில மாநிலங்களில், குறிப்பாக ஹரியானாவில் ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர்கள் துணை ராணுவ பாதுகாப்பு மூலம் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

அதேபோல், ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர்களை நிறுத்துவது அல்லது ஆக்ஸிஜனின் இயக்கத்தைத் தடுக்கும் எவருக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இன்று காலை மற்றொரு மருத்துவமனை தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், “என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்கவே நாங்கள் நடுங்குகிறோம். உண்மையில் எல்லா மருத்துவமனைகளும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றன” என்றனர்.

ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். வழியில் எந்த தடையும் ஏற்படாமல், உடனடியாக ஆக்ஸிஜனை கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, நேற்று மாலை விசாரணையின் போது சற்று காட்டமாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘இப்படியொரு இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்’ என்று மத்திய அரசை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter