Home » வழக்கு பாயலாம் என்கிற அச்சமா ? சாட்டை துரைமுருகன் கைது நேரடியாக கண்டனம் தெரிவிக்காத சீமான்!

வழக்கு பாயலாம் என்கிற அச்சமா ? சாட்டை துரைமுருகன் கைது நேரடியாக கண்டனம் தெரிவிக்காத சீமான்!

0 comment

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தக்கலை பொதுக்கூட்டத்தில் தாமும் பங்கேற்றிருந்ததால் தம் மீதும் நடவடிக்கை பாயலாம் என்பதால் சாட்டை துரைமுருகன் கைதுக்கு சீமான் நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக கனிம வள கொள்ளைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் காங்கிரஸுக்கு எதிராக ஆவேசம் காட்டினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசி வருகிறார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் கே.எஸ்.அழகிரி.
இந்த அறிக்கைக்கு பதில் தரும் வகையிலேயே தக்கலை ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தனர். இதில் பேசிய சாட்டை துரைமுருகன், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசினார். காங்கிரஸ் கட்சியினருக்குக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாகவும் பேசினார். ஆனால் இந்த பேச்சை சீமான் கண்டிக்கவில்லை. இந்த நிலையில் தக்கலை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
.

இந்த கைதுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகனைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. ‘சாட்டை’ துரைமுருகனை தற்போதையச் சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் என தெரிவித்துள்ளார்.

பொதுவாக கட்சி நிர்வாகிகள் மீதான கைதுக்கு சீமான் நேரடியாக கண்டனம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் தக்கலை கூட்டத்தில் சீமானும் பங்கேற்றிருந்தார். சாட்டை துரைமுருகன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சீமான், அவரை கண்டிக்கவில்லை. அதனால் சீமான் மீதும் வழக்கு பாயக் கூடும் என்பதால் சாட்டை துரைமுருகன் கைதுக்கு அவர் நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter