Wednesday, February 19, 2025

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி
……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்
துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற
……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு
இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்
…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே
கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்
……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே!

பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப்
…பக்குவமாய் வெட்டிவைத்துக் கொண்டவுடன் பின்னர்ப்
பிச்சுப்போ டுவதற்கு மணந்தருமாம் மல்லிக்கீ ரையையும்
…பிரித்துவைத்துக் கொண்டவுடன் பாத்திரத்தை அடுப்பில்
உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர்
….ஊற்றுங்கள் எண்ணெயையும் அப்பாத்தி ரத்தில்
உச்சமாய்ச் சூடேறி கொதிக்கும் எண்ணெய்
…உடனிடுக வெங்காயம் பச்சைநிற மிளகாய்!

வாசனைக்கூ ட்டுமேலம் கிராம்புடன் பட்டை
..வகையறாவும் இஞ்சிபூண்டு விழுதையையும் சேர்த்து
ஓசையுடன் எண்ணெயிலே தாளிக்கும் வேளை
…ஓரமாய் நிற்கின்ற தக்காளி சேர்த்து
மேசையிலே காத்திருக்கும் பட்டாணி கேரட்
…மெதுவாகக் கொட்டுங்கள் எண்ணெயின் சூட்டில்
வாசனையும் நாசியையும் துளைக்கின்ற வரைக்கும்
..வாணலியில் கரண்டியினால் துடுப்பைப்போல் துழாவு!

ஆட்டிறைச்சிக் கழுவியதைத் தேவைக்குக் கணக்காய்
…அடுப்பிலிருக் கின்றஎண்ணெய்க் கொதியலில் கலந்து
போட்டுவிட்டப் பின்னர்தான் ஊறியுள்ள கலவை
…பருப்புவெந்த யத்துடனே அரிசியையும் கொட்டி
தேட்டமுடன் வண்ணம்சேர்; அதற்காக ஒற்றைத்
…..தேக்கரண்டி அளவுக்கு “மசாலாவின்” பொடியை
போட்டவுடன் தண்ணீரைப் பாத்திரத்தின் பாதி
….பரப்பளவில் நிற்குமாறு ஊற்றியதும் மூடு!

ஒருகொதியில் புகைமண்டி வருகின்ற வேளை
…ஓரெலுமிச் சைப்பழத்தின் சாற்றையையும் பிழிந்து
ஒருமுறையில் கிண்டியதும் பாத்திரத்தை மூடு
…ஒருகுவளைத் தேங்காயின் பாலெடுத்துக் கொட்டு
மறுமுறையில் இன்னும்வே கமாகவே துழாவு
…மறுபடியும் தண்ணீரும் குறைவாகிப் போனால்
மறுகொதியும் வருமளவுத் தண்ணீரை ஊற்று!

மணக்குமல்லிக் கீரையிலை மேற்பரப்பில் கொட்டு
….மயக்கும்வா சனையுடனே புகைமண்டிக் காட்டும்
கணக்காகத் தண்ணீரும் கலந்திட்டால் நோன்பு
…கஞ்சியென்னும் அமிர்தமும் சொல்லிடுமே மாண்பு
பிணக்கின்றிச் சுவைகூட்ட உப்பையும் அளந்து
….பிரியமுடன் இட்டுக்கொள்; மறவாமல் கலந்து
சுணங்காமல் அடுப்பின்கண் சூட்டையும் குறைத்தால்
…சுவைகுன்றா நோன்புகஞ்சி ஆயத்தமாகும் நிறைவாய்

கவியன்பன்கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல்...

‘தளர்வுகளற்ற தன்னம்பிக்கை!’ – அதிரை அப்துல் ரஹ்மானின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்!

ஊரே அடங்கிரு! உயிரெல்லாம் அடங்குது! இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்க போகுது இதே கடினமான நாட்கள்! இதே புலம்பல் தான் அடிகோட்டு ஏழை முதல்...
spot_imgspot_imgspot_imgspot_img