Home » *இயற்கை* *(Nature)*

*இயற்கை* *(Nature)*

0 comment

புத்தனுக்கு போதிமரம்

குப்பனுக்கு ஏது மரம்?

ஒஸான் படலம்

ஓட்டையால் துன்பப் படலம்

வீசுமாக் காற்றும்; மரங்கள்

வீழ்ந்திடும் போழ்தும்

”ஏசி”க் காற்றும் இனி

ஏழைக்கு எட்டாக் கனி

மரங்கள்

பூமித்தாயின்

பூர்விக சேய்கள்

வளர்த்தால் நேயமாய்த்

தீர்க்கும் நோய்கள்

வளர விடாமல்

வாளால் அறுப்பவர்கள்

வஞ்சக மனிதப் பேய்கள்

மரமெனும் தாயை அழிக்க

மரத்தினாலான கோடரியை

மனிதனும் துணைக்கு அழைக்க

வளர்த்த கிடா மார்பினில் பாயென

வளர்த்து விட்டோம் துரோகச் சேயினை

நிழலில் அன்னையாய்

தென்றலில் கன்னியாய்

மூலிகையில் மருத்துவனாய்

ஓயாமல் உழைக்கும் மரங்களை

ஓயாமல் அழிக்கும் மர மண்டைகளே

சாபமும் கோபமும் சுனாமியாகி

சாய்க்கின்றன மரத்தண்டுகளை

அலையாத்திக் காடுகளே

அலைகளோடுப் போராடுதே

அரண்களாய்க் காக்கும்

மரங்களைப் போக்கும்

மனங்களை என்னென்பேன்?!

குணங்களில் புண்ணென்பேன்

ஈரக்குலை களைப்போன்ற ஈரப்பத நிலங்களையும்

எழிலார்ந்து வளர்ந்துவரும் இயற்கைதரும் வளங்களையும்

வேரருக்கும் தீயகுணம் வேண்டாமெம் நாட்டினிலே

வேண்டுகோளை உங்களிடம் விடுக்கின்றேன் பாட்டினிலே

பிழையினைச் செய்தாய் பொறுப்பிலா மனிதா

மழையினை எப்படி மேகந்தரும் எளிதாய்?

சுரண்டும் மணலால் சும்மா தங்குமா

திரண்டு வருகின்றத் தண்ணீர் எங்குமே?

கறந்த பாலும் கனமடி புகாதே

வறண்ட நிலமும் வளத்தினைத் தராதே

*கவியன்பன் கலாம்*

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் மரக்கட்டை

கட்டையாகிப் போனபின்பும் மரக்கட்டை

மட்டில்லாச் சேவைகளைச் மரங்களுந்தான்

மனிதனுக்குச் செய்துவந்தும் மறந்துபோனான்

இயற்கையெனும் இளையகன்னி மரமென்போம்

இறைவனளித்த ஈடில்லா வரமென்போம்

செயற்கையாய்க் காண்பதெலாம் வெறுந்தோற்றம்

செழுமையினைத் தந்திடுமே பெருந்தோட்டம்

வாழவைப்போம் வளர்த்தோங்கும் மரங்களைத்தான்

வதைத்திடுவோம் அழிக்கும் கரங்களைத்தான்

சூழவைப்போம் சுற்றுப்புற 

உரங்களைத்தான்

சொல்லிவைப்போம் சந்ததிக்கும்

  தரங்களைத்தான்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter