காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த மார்ச் 30ம் தேதி பயணிகளுடன் சோதனை ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் ரயில் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிஜெகன்னாதன் கூறுகையில், ‘பஸ் கட்டணம் மிக அதிகமாக உள்ளதால் ரயிலில் செல்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். மதுரைக்கு ரயில் வசதி இல்லாததாலேயே கட்டணம் அதிகமாக இருந்த போதும் மக்கள் பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவம், வணிகம், கல்வி உள்பட பல்வேறு தேவைகளுக்கு மதுரைக்கு அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர்.
தவிர தொடர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மதுரைக்கு பஸ்களில் செல்லும்போது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு முடியாத நிலை உள்ளது.
மதுரை வரை நீட்டித்து இயக்க மதுரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதுமான வழித்தடம் இல்லையெனில் அத்தகைய வசதி ஏற்படும் வரை புறநகர் பகுதியான சிலைமான ரயில் நிலையம் வரை இயக்கலாம். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.