
அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த ஹாஜி ஹாஃபிழ் N.M.A அப்துல் லத்திப்பின் மகன் A.முகம்மது (39வயது), ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். முதன்முறையாக 2018ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் தூர மாரதான் போட்டியில் பங்கேற்று ஐந்தரை மணிநேரத்தில் முழு தூரத்தையும் கடந்த இவர், 2019, 2020, 2021 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மாரதான் போட்டிகளில் பங்கெடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் 2022 அக்டோபர் 9ம் தேதி உலகபுகழ்பெற்ற சிகாகோ நகரில் நடைபெற்ற மாரதான் போட்டியில் பங்கேற்பதற்காக துபாயிலிருந்து அமெரிக்கா சென்ற முகம்மது, அந்த போட்டியில் பங்கேற்று 42 கிலோமீட்டர் தூரத்தை 3.56 மணிநேரத்தில் கடந்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முகம்மது, உடல் ஆரோக்கியத்திற்கு நடை அல்லது ஓட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் மனம் புத்துணர்ச்சிபெறுகிறது. 2018ம் ஆண்டு முதன்முதலில் துபாயில் நடைபெற்ற மாரதான் போட்டியில் பங்கேற்றேன். அதன் பின்னர் தொடர்ச்சியாக மாரதான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்ததாக சிகாகோவை தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, லண்டன், அமெரிக்காவின் போஸ்டல் மற்றும் நியூயார்க் சர்வதேச மாரதான் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளேன்.
1.8 கிலோ மீட்டர் நீச்சல், 90 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மற்றும் 21 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய அயன்மேன் டிரையத்லான் போட்டியில் பங்கேற்கும் திட்டமும் தன்னிடம் இருப்பதாக கூறினார்.
சர்வதேச மாரதான் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கும் அதிரைக்கும் பெருமை சேர்த்து வரும் முகம்மது, விரைவில் ஓர் சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள்…