Home » கொரோனா உதவி கேட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள்… அவசர காலத்தில் இப்படியும் அவலங்கள்!

கொரோனா உதவி கேட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள்… அவசர காலத்தில் இப்படியும் அவலங்கள்!

0 comment

இணையதள பயன்பாடு பரவலாக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளில், சமூக வலைதளங்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. தினசரி நடவடிக்கைகளை அப்டேட் செய்வோர் முதல் சமூக வலைதளத்தை தங்கள் தொழிலுக்கான இணைப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் வரை இந்த வரிசை நீளும். இவை தவிர சமூகப் போராட்டங்கள், அவசர ரத்த தானம், கொரோனா காலத்தில் அடிப்படை உதவிகள் எனச் சமூக வலைதளத்தால் நடந்த நன்மைகள் நிறைய. இன்னொரு பக்கம், அதனால் பல மடங்கு தீமைகளும் வளர்ந்து நிற்கின்றன.

கமென்ட்களில் கெட்ட வார்த்தைகளைக் கொட்டி வைப்பது, போலிக்கணக்கு வைத்து ஏமாற்றுவது, பெண்களுக்குத் தவறாக குறுஞ்செய்திகள் அனுப்புவது, புகைப்படங்களைத் தவறாகச் சித்திரிப்பது என எண்ணிக்கையில் அடங்காத அநாகரிகங்களும் குற்றங்களும் சமூக வலைதளங்களில் மலிந்துள்ளன.

குறிப்பாக, சமூக வலைதளங்களின் ஒரு பக்கம் பெண்களை இழிவாகப் பேசுவதை மட்டுமே முழுநேர வேலையாக வைத்திருக்கும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு இங்கு கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மும்பையை சேர்ந்த ஷஸ்வதி சிவா என்ற பெண்ணுக்கு சமீபத்தில் நேர்ந்த கொடூர அனுபவம், அதற்கு சாட்சி.

ஷஸ்வதி சிவா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் உறவினருக்கு பிளாஸ்மா மற்றும் வென்டிலேட்டர் தேவைப்பட்டதால் தனது ட்விட்டர் கணக்கில் உதவி கோரி இருந்தார். உதவிசெய்ய விரும்புபவர்கள் அழைப்பதற்காகத் தனது மொபைல் எண்ணையும் பதிவில் சேர்த்திருந்தார். உதவி கேட்ட பெண்ணுக்கு சில உதவிகளுடன், பல தொல்லைகளும் வந்து குவிந்துள்ளன.

நம் வலைதளவாசிகளின் கேவலப் போக்கால் மன வேதனை அடைந்த ஷஸ்வதி, தனது கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்திலேயே பகிர்ந்துள்ளார்.

“என் உறவினரின் உடல்நலன் கருதி அவசர உதவி கேட்டு என் மொபைல் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டேன். அடுத்த நாள் முதல் ஒவ்வொரு நிமிடமும் மூன்று, நான்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சில ரத்த வங்கிகளும், ரத்த தானம் செய்வோரும் தொடர்பு கொண்டனர்.

ஓர் அழைப்பில், நீங்கள் ரத்த தானம் செய்ய விரும்புகிறீர்களா?' எனக் கேட்டதற்கு,அதெல்லாம் இல்லை. நீங்கள் திருமணம் ஆகாதவரா எனத் தெரிய வேண்டும்’ எனக் கூறினார். உதவி செய்வதற்கான அழைப்புகளைவிட, இதுபோல ஒரு பெண்ணாக என்னை துஷ்பிரயோகம் செய்யும் அழைப்புகளே அதிகம் வந்தன.

பிளாஸ்மா தானம் செய்பவருக்காக நான் காத்திருக்கும் நேரம் எனக்கு வந்த அழைப்புகள், என்னை மென்மேலும் வேதனையுறச் செய்தன. மேலும், இணையத்தில் ஆபாச கதைகளுடன் என் போன் நம்பரை வெளியிட்டு இருந்தனர். அதன் பிறகு வந்த அழைப்புகளில், எனக்குத் திருமணம் ஆகவில்லை எனில் என் புகைபடத்தை அனுப்பச் சொல்லிக் கேட்கத் தொடங்கினர். வாட்ஸ்அப்பில் என் புரொஃபைல் புகைப்படத்தை வர்ணித்து குறுஞ்செய்திகள் அனுப்பினர். உதவி செய்வதாகப் பேசிய சிலர், `டேட்டிங்க் செல்லலாமா?’ என்று கேட்டனர்.

சிலர் இன்னும் மோசமாக, எனக்கு குரூப் கால் செய்தனர். வாட்ஸ்அப்பில் தொடர்ந்து தங்களது ஆபாச படங்களை அனுப்பினர். இனி எக்காரணத்துக்கும் பெண்கள தங்கள் மொபைல் எண்ணை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடாதீர்கள்” என அவர் கூறியிருந்தார்.

சமூக வலைதளத்தில் உதவி கேட்ட பெண்ணிடம் நம் ஆண்கள் நடந்துகொண்ட முறை, இந்திய ஆண்கள் மனதின், அவர்களது கோரத்தின் நேரடி வெளிப்பாடு.

21-ம் நூற்றாண்டு வரை வந்துவிட்டோம். இப்போதும் பெண்களை சக மனிஷியாகப் பார்க்காமல், உதவி கேட்கும் சூழலில்கூட அவளை பாலியல் பொருளாகவே பார்க்கும் ஆண்கள், சமூகத்தின் அழுகிய பகுதியாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள். பாலியல் எதிர்பார்ப்பின்றி பெண்களுக்கு உதவ முடியாத மனம் நச்சுத்தன்மை உடையது.

`பெண்கள் தங்கள் மொபைல் எண்ணை உதவிகோரிக்கூட சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம்’ என்ற ஷஸ்வதி சிவாவின் பதிவில், உண்மையில் இந்திய ஆண்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். உதவி கோரி சமூக வலைதளத்துக்கு வர இனி பெண்கள் தயங்க மாட்டார்களா, அஞ்ச மாட்டார்களா?

ஆண்கள் பெண்களை போகப் பொருளாக நினைக்காமல் சக மனுஷியாகக் கருதும் சமூகம் உருவாவது எப்போது?

நன்றி : விகடன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter