மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதியான இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டுக்கோட்டை மார்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு பேரணியாக வருகை தந்த திமுகவினர், மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை MLA, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இவ்விழாவில் திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பழஞ்சூர் கே. செல்வம், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் ஏனாதி பா. பாலசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட பொருளாளர் அதிரை எஸ்.எச். அஸ்லம், பட்டுக்கோட்டை நகர செயலாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், தெற்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.











